புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர விவாதம்; ‘கிங்’ மேக்கர் யார் என்பது விரைவில் தெரியவரும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளார். "கூட்டணி அமைத்தே போட்டி" என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழுவை அமைப்பது தொடர்பாக இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு பரப்புரை கூட்டத்தில் திமுகவை "தீய சக்தி" என்றும், தனது தவெக-வை "தூய சக்தி" என்றும் மிகக் காரசாரமாக விமர்சித்த விஜய், தற்போது கள எதார்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார். இன்றைய கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களின் வருகை, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தவெக-வுக்குப் பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெறவுள்ள 5 முதல் 7 முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. "விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி" என்ற அடிப்படை நிபந்தனையுடன், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தக் குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து கழன்று வருமா? அல்லது பிற சிறிய கட்சிகள் விஜய்யுடன் கைகோர்க்குமா? என்பது இந்தக் குழுவின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே அமையும். தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்கள் தவெக-வின் 'கூட்டணி அலை'களால் அதிரப்போவது உறுதி.
.jpg)