விஜய்யின் ஈரோடு பரப்புரை: ஏற்பாடுகள் தீவிரம்! கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆய்வு: காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைக்கான இடத்தை இன்று காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் வாகனத்தில் நின்றபடி விஜய் பரப்புரை செய்யவுள்ளார். பரப்புரைக்காக வருவாய் மற்றும் காவல்துறையினர் இடத்தை ஆய்வு செய்தனர். 84 விதிமுறைகளைக் காவல்துறை கடிதங்களாக வழங்கியுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பரப்புரையில் 25 ஆயிரம் நபர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் முதல்முறையாகப் பொது இடத்தைத் தேர்வு செய்து நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். "டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவார்களா, மற்றும் டிடிவி தினகரன் தவெகவில் இணைவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்" என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.
"தொண்டர்களுக்குரிய மரியாதை கொடுக்கும் கூட்டணியில் இணைவோம்" என்று டிடிவி தினகரன் கூறிய கருத்துக்கு, "ஒவ்வொரு கருத்து சொல்ல உரிமை உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க எந்த வகையில் கூட்டணி அமையும், எந்த வகையில் விட்டுக்கொடுப்போம் என்பதெல்லாம் தெரியும்" என்று பதிலளித்தார்.
தவெகவில் யார் யார் இணைவார்கள் என்று தெரிவித்தால், அவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படும் என்று கூறிப் பதிலைத் தவிர்த்தார். பரப்புரை வாகனத்தின் மையப்பகுதியில் எம்ஜிஆர், அண்ணா மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் முதல் சுற்றுப்பயணத்திலிருந்தே இடம்பெற்றுள்ளன என்று தெளிவுபடுத்தினார்.
புதுச்சேரி போல இங்கு QR கோட் முறை இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், "புதுச்சேரி சிறிய மாநிலம், குறிப்பிட்ட எல்லையில் உள்ளது. தமிழகம் புதுச்சேரி போன்று அல்ல," என்று தெரிவித்தார். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது, மக்கள் அப்படியே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்றும் அவர் கூறினார்.
தி.மு.க.விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கே.கே. செல்வம் அ.தி.மு.க.வில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "என்ன கேள்வி கேட்பது என்று கூடத் தெரியவில்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
