ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மறைவு; 48 ஆண்டுகால கலைப் பயணம் இன்றுடன் நிறைவுற்றது!
மலையாளத் திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திரம், இயக்கம் மற்றும் எழுத்து எனத் தனது பன்முகத் திறமையால் சுமார் ஐந்து தசாப்தங்களாகக் கோலோச்சிய ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலைக் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், திருபுனித்து தாலுக்கா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், சென்னை பிலிம் சேம்பர் நிறுவனத்தில் நடிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதே பேட்ச் மாணவரான இவர், ரஜினியின் மிக நெருங்கிய வகுப்புத் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. 1977-ல் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இவர், வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும், ‘சந்தேசம்’, ‘உதயனனு தாரம்’ போன்ற கிளாசிக் திரைப்படங்களை இயக்கிய இயக்குனராகவும் முத்திரை பதித்தார். ரசிகர்களைத் தனது நையாண்டி கலந்த பேச்சால் சிரிக்க வைப்பதோடு, சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டிச் சிந்திக்க வைப்பதிலும் அவர் வல்லவர்.
மறைந்த ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவரது இரு மகன்களுமே இன்று மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாசனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள நிலையில், கேரள முதல்வர் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாகத் திரை விமர்சகர்கள் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
