இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூடச் சொல்லாதது ஏன்? திமுகவின் ஓட்டு பசி அம்பலமாகிவிட்டது என கோவை தெற்கு எம்.எல்.ஏ கடும் தாக்கு!
கோவை: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சரின் பேச்சு திமுகவின் ‘ஓட்டு பசியை’ அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதே திமுகவின் வரலாறு எனச் சாடியுள்ளார். கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளில் பங்கேற்பதோ அல்லது குறைந்தபட்சம் வாழ்த்துச் சொல்லவோ முன்வராதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் தைப்பூச விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா? என அவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விழாவில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (SIR) குறித்து முதலமைச்சர் பேசியிருப்பது, சிறுபான்மையினரின் வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் நாடகம் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
"சிறுபான்மையினரின் வாக்குகளை திமுகவினர் சேர்ப்பார்கள், கவலை வேண்டாம்" என முதலமைச்சர் பேசியிருப்பது, போலி வாக்காளர்களைச் சேர்த்து வெற்றி பெறலாம் என்ற பூடகமான மிரட்டல் என அவர் தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கப்பட்ட சவால் மட்டுமல்லாமல், ஜனநாயகத்தை மிரட்டும் செயல் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய போலி வாக்குச் சேர்ப்பு முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆன்மீக விவகாரங்களில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், இந்து கோவில்களின் திருப்பணிகள் பக்தர்களின் காணிக்கையில்தான் நடக்கிறதே தவிர, அரசாங்கப் பணத்தில் அல்ல என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டால் லஞ்சம் கேட்கும் அவலம் நிலவுவதாகவும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் திமுக அரசு அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ்துமஸ் விழாவில் இயேசுவின் அன்பைப் போதிக்காமல் மத மோதலைத் தூண்டும் வகையில் பேசிய முதலமைச்சர், மீண்டும் ஒருமுறை தான் ‘இந்து விரோதி’ என்பதை நிரூபித்துவிட்டார் என அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
