காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த துயரம்; தள்ளிவிடப்பட்டார்களா எனச் சமூக வலைதள வீடியோவை வைத்துப் போலீஸ் விசாரணை!
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் மணம் புரிந்த இரண்டு மாதங்களேயான இளம் தம்பதி, ரயிலில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் ராவு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொரடா சிங்காசலம் (25) மற்றும் பவானி (19) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டனர். ஹைதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப் பிழைப்பு நடத்தி வந்த இவர்கள், நேற்று செகந்திராபாத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு மசூலிப்பட்டினம் விரைவு வண்டியில் (Express Train) பயணம் செய்துள்ளனர். பயணத்தின்போது இருவருக்கும் இடையே 'ஈகோ' யுத்தம் ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் வெடித்ததாகக் கூறப்படுகிறது. ரயில் வங்கலப்பள்ளி நிலையத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற இருவரும் கதவோரம் நின்று கொண்டிருந்த நிலையில், திடீரென கீழே குதித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறை அதிகாரிகள், சிதைந்த நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது வெறும் தற்கொலையா அல்லது இவர்களது காதல் திருமணத்தால் ஆத்திரமடைந்த யாராவது இவர்களைத் தள்ளிவிட்டார்களா என்கிற கோணத்திலும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்து வருகின்றனர். இதற்கிடையே, அவர்கள் ரயிலில் ஆவேசமாகச் சண்டையிட்டுக்கொண்ட காட்சிகளை அங்கிருந்த சக பயணி ஒருவர் தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த ஆதாரத்தை வைத்துத் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
