செங்கோட்டையன் முதல் ஆதவ் அர்ஜுனா வரை விமர்சனம்; "உழைப்பால் உயர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈடாகுமா?" என கேள்வி!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இன்று நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவருடன் இணைந்துள்ள நிர்வாகிகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார். தவெக ஒரு தூய்மையான கட்சி அல்ல, அது ஒரு 'கலப்படக் கட்சி' என்று அவர் குறிப்பிட்டது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய கே.பி. முனுசாமி, "விஜய் தன்னைத் தூய்மையானவர் என்றும், திமுகவைத் தீய சக்தி என்றும் பேசி வருகிறார். ஆனால், தவெக எப்படித் தூய்மையான கட்சியாக இருக்க முடியும்? ரசிகர்களை மட்டுமே நம்பி அவர் கட்சி ஆரம்பித்திருந்தால் அது தனித்தன்மை வாய்ந்ததாக இருந்திருக்கும். ஆனால், இன்று விஜய்யைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். எங்குப் பதவி கிடைக்கும், எங்குச் சுகம் கிடைக்கும் என்று அலைபவர்களே அங்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். நாளை இவர்களே விஜய்யைக் காலி செய்துவிட்டு வேறு கட்சிக்கு ஓடிவிடுவார்கள்; விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்தார்.
தொடர்ந்து தவெக-வின் முக்கிய நிர்வாகிகளைப் பெயர் குறிப்பிட்டு விமர்சித்த அவர், "விசிக-விலிருந்து வந்துள்ள ஆதவ் அர்ஜுனா இந்தியா முழுவதும் லாட்டரி விற்பவர். அவர் திமுக, விசிக எனப் பல இடங்களைத் தாண்டி இப்போது விஜய்யிடம் தஞ்சம் புகுந்துள்ளார். அதேபோல், 53 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து அனைத்துப் பதவி சுகங்களையும் அனுபவித்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த செங்கோட்டையன் போன்றவர்கள் இன்று அங்குச் சென்று விஜய்யைப் புரட்சி தளபதி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? சாதாரணத் தொண்டனாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், தவெக என்பது ஒரு கலப்படக் கூட்டம். இங்கிருந்து சென்ற நிர்மல் குமார் போன்ற சுற்றும் கூட்டத்தை வைத்துக்கொண்டு விஜய் அரசியல் நடத்த முடியாது" என அனல் பறக்கப் பேசினார்.
