திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பதற்றம்; கைதானவர்களைச் சந்திக்கச் சென்ற பாஜக மூத்த தலைவரைத் தடுத்ததால் பரபரப்பு!
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரிப் போராடிக் கைதானவர்களைச் சந்திக்கச் சென்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை, காவல்துறை சினிமா பாணியில் விரட்டிச் சென்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி எச்.ராஜா காரில் ஏறித் தப்பிய நிலையில், அவரது வாகனத்தைப் போலீஸ் வாகனங்கள் அதிவேகமாகத் துரத்தியதால் அந்தப் பகுதியே ‘ரணகளம்’ ஆனது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அனுமதி கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பெண்களைக் காவல்துறையினர் கைது செய்து, திருநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். முன்னதாக, தீப விவகாரத்தில் மனவேதனையடைந்து தற்கொலை செய்துகொண்ட பாஜக நிர்வாகி பூர்ண சந்திரனின் இல்லத்திற்குச் சென்ற எச்.ராஜா, அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பூர்ண சந்திரனின் தற்கொலைக்குக் காரணமான மாவட்ட ஆட்சியரும், கமிஷனரும் இந்து விரோதிகள்; அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர்களுக்கு 10 லட்சம் தரும் ஸ்டாலின் அரசு, பூர்ண சந்திரன் குடும்பத்தைப் புறக்கணிப்பது ஏன்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ‘கிழிந்து’ தொங்குகிறது" என ஆவேசமாகச் சாடினார்.
இதனைத் தொடர்ந்து, கைதாகி மண்டபத்தில் உள்ளவர்களைச் சந்திக்க எச்.ராஜா கிளம்பியபோது, உதவி ஆணையர் ரகு தலைமையிலான போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். "நீங்கள் அங்குச் செல்லக்கூடாது; சென்றால் கைது செய்வோம்" எனப் போலீசார் எச்சரித்ததால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருடன் பாஜகவினர் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த அதேவேளையில், திடீரென எச்.ராஜாவை அவரது ஆதரவாளர்கள் மற்றொரு ரகசிய காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் அனுப்பி வைத்தனர். காரில் எச்.ராஜா ஏறியதை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாகத் தங்களது வாகனங்களில் அந்தப் பின்னால் பாய்ந்தனர். சினிமா படக்காட்சிகளை மிஞ்சும் வகையில் மதுரையின் வீதிகளில் இந்தத் ‘சேசிங்’ படலம் அரங்கேறியது. எச்.ராஜாவின் கார் சிட்டாகப் பறந்து மறைந்த நிலையில், காவல்துறையினர் அவரைப் பிடிக்கத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
.jpg)