திருத்தணி பள்ளிச் சுவர் விபத்து: மாணவன் பலி; சடலத்தை வாங்க மறுக்கும் பெற்றோர்!! Tiruttani School Wall Collapse: Student Dies, Relatives Refuse to Accept Body

'₹1 கோடி நிதியும், அரசு வேலையும் வேண்டும்' - எம்.எல்.ஏ. நடத்திய பேச்சுவார்த்தை படுதோல்வி!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே உள்ள அம்மனேரி ஊராட்சி கொண்டாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று மதியம் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரது மகன் மோகித் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

 

நேற்று பிற்பகல் மதிய உணவு இடைவேளையின் போது, சிறுவன் மோகித் பள்ளியின் கைப்பிடிச் சுவர் அருகாமையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தச் சுவர் திடீரென சரிந்து அவன் மேல் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் முகாமிட்டுள்ள மாணவனின் உறவினர்களிடம் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் படுதோல்வியில் முடிந்தது. "எங்கள் வீட்டுப் பிள்ளையை இழந்து நிற்கிறோம்; மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்களைச் சந்தித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹1 கோடி இழப்பீட்டு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம்" என்று உறவினர்கள் உறுதியாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிறுவனின் சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, திருத்தணி அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுக் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிச் சுவர்களின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk