அடுத்த 4-6 மாதங்களில் புதிய பட்டியல் (Listing) விதிகள் வெளியீடு; குழப்பங்களைத் தீர்க்க தொழில் துறையுடன் இணைந்து சீராய்வு.
இந்தியப் பங்குச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI), பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான விதிகள் மற்றும் வெளிப்படுத்தல் நடைமுறைகளில் (Disclosure Norms) பெரிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான சீராய்வு அறிக்கையின் வரைவு ஆவணம் அடுத்த 4 முதல் 6 மாதங்களில் வெளியிடப்படும் என்று செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) நடந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், இந்தச் சீராய்வு நாட்டின் பட்டியல் கட்டமைப்பில் (Listing Framework) செய்யப்படவுள்ள மிக முக்கியமான திருத்தங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கூறினார்.
தற்போதுள்ள குழப்பங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக, தொழில் துறையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தச் சீராய்வு வடிவமைக்கப்படுகிறது. இதில் புதிய கால நிறுவனங்கள் (New Age Companies), Promoter-கள் தொடர்பான பிரச்சினைகள் எனப் பல அம்சங்களில் புதிய முன்மொழிவுகள் இடம்பெற உள்ளன.
SME பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் செபி சிறப்பு கவனத்தில் எடுத்துள்ளது.
செபி தலைவர் பாண்டே, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME-கள்) பங்குச் சந்தைக்கு வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் தென்னிந்தியாவிலிருந்து மட்டும் 1,000 MSME-களை பங்குச் சந்தைக்குக் கொண்டு வர இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சில்லறை முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தைத் தகவல்கள் எளிதில் சென்று சேர செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
சில்லறை முதலீட்டாளர்களுக்குப் பயனுள்ளதாக, ஐ.பி.ஓ. (IPO) விவரங்களின் சுருக்கமான மற்றும் எளிதில் புரியக்கூடிய அறிக்கை வடிவமைப்புக்கான ஆலோசனைக் கட்டுரையைச் செபி ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.jpg)