ஊடுருவலுக்குத் தயாராக 69 'Launch Pads'-களில் பயங்கரவாதிகள் திட்டம்; பதிலடிக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் தயார்!
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு (Line of Control - LoC) நெடுகிலும், இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட சுமார் 120 பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதிகள் எண்ணிக்கை: காஷ்மீர் எல்லையின் BSF இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.) அசோக் யாதவ் வெளியிட்ட தகவல்படி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் உள்ள 69 Launch Padsகளில் சுமார் 120 பயங்கரவாதிகள் ஊடுருவத் தயாராக உள்ளனர்.
கடந்த மே மாதம் இந்திய ராணுவத்தின் பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் சில Launch Padகளைத் தங்கள் எல்லைக்குள் மாற்றியிருந்தாலும், அவை தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாக BSF தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஊடுருவல் அல்லது தாக்குதல் செய்யப்பட்டால், இந்தியப் பாதுகாப்புப் படை கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்" திட்டத்தின் அடுத்த கட்டம் தயக்கமின்றிச் செயல்படுத்தப்படும் என்று BSF கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. இதுவரை 4 முயற்சிகளில் 13 ஊடுருவல்காரர்கள் மட்டுமே ஈடுபட முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளைத் தாண்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு உள்ளேயும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கவனத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஐ.ஜி. அசோக் யாதவ் குறிப்பிட்டுள்ளபடி, பாதுகாப்புப் படையினர் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு உள்ளே "அமைதியான முறையில் ஆள் சேர்ப்பு" மற்றும் தீவிரவாத மையங்களாகச் செயல்படும் நிறுவனங்கள் மீதும் தங்கள் கவனத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
