உதகை ஆட்சியர் அதிரடி உத்தரவு; போக்சோ கைதிக்கு கோவை சிறையில் பிடி இறுகியது!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்ற இடத்தில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளராக இருந்தவரின் இந்த மிருகத்தனமான செயல் நீலகிரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அடுத்த ஜக்கலோரை பகுதியைச் சேர்ந்த நஞ்சுண்டன் (35) என்பவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராகப் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் தேனாடுகம்பை பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நஞ்சுண்டன், அங்கு மது போதையில் இருந்துள்ளார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக அந்தச் சிறுமியை மிரட்டியும் உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் கொதித்தெழுந்தனர்.
உடனடியாக உதகை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நஞ்சுண்டனைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் இது போன்ற சமூக விரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில், நஞ்சுண்டனை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, நஞ்சுண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டு, ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
