"பெரிய கட்சிகள் எங்களை அணுகுகின்றன; தை பிறந்தால் வழி பிறக்கும்" – 2026 வியூகம் குறித்து டிடிவி அதிரடிப் பேட்டி!
வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) தவிர்த்துவிட்டு எந்தவொரு கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்த டி.டி.வி.தினகரனுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற சட்டமன்றத் தேர்தலில் அமமுக-வின் பலம் இல்லாமல் யாரும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். கடந்த 2021 தேர்தலில் சிலரின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டோம்; அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால், இந்தத் தேர்தல் அப்படிப்பட்டது அல்ல; இது எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டிய தேர்தல். 234 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்களது கட்டமைப்புகளை மிக வலிமையாகப் பலப்படுத்தியுள்ளோம். பல மாவட்டங்களில் எங்களது வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது" என்று 'கெத்தாக'த் தெரிவித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய அவர், "தமிழகத்தின் பெரிய கட்சிகளும், புதிய கூட்டணியை உருவாக்கத் துடிக்கும் கட்சிகளும் எங்களை நோக்கித் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காகத் தூது விட்டு வருகின்றன. எந்தத் திசையில் எங்களது பயணம் அமையும் என்பதை வரும் தை மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், அமமுக-வின் கோட்டையான ஆண்டிப்பட்டி தொகுதியில் எங்களது கட்சி வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவார். எங்களது கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டோம்" என்று மிகத் தீர்க்கமாகப் பேசினார். டி.டி.வி.தினகரனின் இந்த 'தை மாத' அறிவிப்பு எதிர்பார்ப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது.
