"ஹனிபா திமுக-விற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் சொத்து!" – கலைவாணர் அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான விழா!
திராவிட இயக்கத்தின் இசை முரசு, ஈடு இணையற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், "இசை முரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு நினைவு நூலை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பொங்கப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இசைமுரசு ஹனிபா அவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்டு, கலையையும் கொள்கையையும் ஒருசேர வளர்த்தார். அவர் திமுக-விற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் சொந்தமான பொதுச்சொத்து. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகழ் தமிழர் நெஞ்சங்களில் இருக்கும் வரை, நாகூர் ஹனிபாவும் புகழுருவில் நம்முடன் வாழ்வார்" என்று புகழாரம் சூட்டினார்.
நூற்றாண்டு விழா அழைப்பிதழைப் பார்த்தபோது, கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆகிய இருவரின் தோள்களிலும் உரிமையோடு கைபோட்டு ஹனிபா கம்பீரமாக நிற்கும் புகைப்படமே நினைவுக்கு வந்ததாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அந்தத் துணிச்சலும் நட்புரிமையும் அவருக்கு மட்டுமே இருந்ததாகக் கூறினார். "ஹனி என்றால் தேன், பா என்றால் பாட்டு; பெயருக்கேற்றார் போல இனிமையான பாடல்களைப் பாடியவர் அவர்" என்றும், "ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை" என்று தந்தை பெரியாரே வியந்து பாராட்டிய குரல் வளம் அவருடையது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கல்லக்குடிப் போராட்டத்தின் தீரத்தைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது ஹனிபாவின் குரல்தான் என்றும், திமுக-வின் வளர்ச்சிக்கு அவரது குரல் பெரும் துணையாக நின்றதையும் முதல்வர் நினைவு கூர்ந்தார். நாகூரில் தி.மு.க. கிளையைத் தோற்றுவித்ததும், தனது இல்லத்திற்கு "கலைஞர் இல்லம்" என்று பெயர் சூட்டியதும் ஹனிபாவின் இயக்கப் பற்றிற்குச் சான்று. 10 முறைக்கு மேல் சிறை சென்ற தியாகச் சீலரான அவருக்கு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் எம்.எல்.சி பதவி, கலைமாமணி விருது மற்றும் வக்ஃபு வாரியத் தலைவர் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு தலைவர்கள் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அடையாறில் உள்ள இசைக்கல்லூரிக்கு 'நாகூர் ஹனிபா' பெயரைச் சூட்ட வேண்டும் என அப்பல்லோ ஹனிபா வேண்டுகோள் விடுத்தார். ஹனிபாவின் வாழ்க்கை வரலாற்றைப் பாடநூல் கழகம் நூலாக வெளியிட வேண்டும் என திண்டுக்கல் ஐ.லியோனியும், இசைக்கலைஞர்களுக்கு அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் எனப் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனும் கோரிக்கை விடுத்தனர். சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஹனிபாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என விழாவில் பங்கேற்ற கி.வீரமணி மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
.jpg)