பிப்ரவரி மாதம் வட மாநிலத்தவர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்! – காட்பாடியில் வேல்முருகன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வள்ளிமலை கிராமத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பிரம்மாண்ட கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய த.வா.க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், மத்திய அரசு மற்றும் பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்துப் பல்வேறு அதிரடிப் புகார்களை முன்வைத்தார்.
கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய வேல்முருகன், "தமிழக வாழ்வுரிமை கட்சி என்பது மற்ற கட்சிகளைப் போல பார் (Bar), ஒயின் ஷாப், மதுபான ஆலை அல்லது மணல் குவாரிகளை நடத்திப் பிழைக்கும் கட்சி அல்ல. இது மக்களுக்கான கட்சி. இன்று தெற்கு ஆசியாவிலேயே தமிழகம் மருத்துவத் தலைநகராகத் திகழ்கிறது என்றால், அதற்கு அன்று நான் கொடுத்த ஆலோசனையை ஏற்றுச் செயல்படுத்திய மறைந்த முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையும் ஒரு காரணம். அதேபோல், லாட்டரி விற்பனையைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனச் சட்டமன்றத்தில் நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதனைத் தடை செய்தார். தற்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற எனது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்" எனத் தனது அரசியல் பங்களிப்புகளைப் பட்டியலிட்டார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்துப் பேசிய அவர், "தற்போது பல லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ள புதிய பட்டியலில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் வாக்களித்தால் அது பாஜகவிற்குத் தான் செல்லும்; அவர்களுக்கு மோடியைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இது தமிழகத்தின் அரசியல் அடையாளத்தை அழிக்கும் முயற்சி" என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று கூறும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பதிலடி கொடுத்த அவர், "தமிழகத்தை அயோத்தியாக மாற்ற வேண்டாம்; இது முருகன், வள்ளலார் மற்றும் அய்யா வைகுண்டர் பிறந்த புனித பூமி. அது அப்படியே இருக்கட்டும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
