2026-ல் தங்கம் விலை ரூ.1.25 லட்சத்தை எட்டுமா? - முதலீட்டாளர்களின் கணிப்பு!
தங்கம் மற்றும் வெள்ளி விலையின் இன்றும் கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை), ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லைத் தொடும் நிலைக்கு வந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் விலையேற்றம் 'ராக்கெட்' வேகத்தில் உள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.12,480-ஆக உள்ளது. இது கடந்த 10 நாட்களில் இல்லாத புதிய உச்சமாகும். கடந்த சில தினங்களாக விலையில் சிறு சரிவு காணப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் நகை வாங்குவோரை நிலைகுலையச் செய்துள்ளது. தூயத் தங்கத்தின் விலையும் (24 காரட்) 10 கிராமுக்குச் சுமார் ரூ.1.35 லட்சத்தைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.
தங்கத்தை விட வெள்ளியின் விலை இன்னும் கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.5,000 உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.2.31 லட்சம் என்ற புதிய சரித்திர உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தை மாதம் நெருங்குவதால் திருமணத் தேவைகளுக்காக நகை வாங்கக் காத்திருந்த நடுத்தரக் குடும்பங்கள், இந்த விலையேற்றத்தால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். "சர்வதேசச் சூழல் இப்படியே நீடித்தால், வரும் 2026-ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.25 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக" உலகத் தங்க கவுன்சில் (WGC) நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
.png)