தலைமைச் செயலகத்தில் இன்று ஜாக்டோ-ஜியோ அமைச்சர்கள் சந்திப்பு: 10 அம்சக் கோரிக்கைகள் நிறைவேறுமா?
சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) மற்றும் டிஇடிஓ-ஜேஏசி (TETOJAC) பிரதிநிதிகள் தங்களது 10 அம்சக் கோரிக்கைகளை அமைச்சர்கள் முன்னிலையில் அடுக்க உள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னணியில் உள்ள முக்கியக் கோரிக்கைகள்:
OPS மீட்பு: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) அமல்படுத்த வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம்: 2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம்: தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலிப்பணியிடங்கள்: பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
வருகிற ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாக ஊழியர் சங்கங்கள் ஏற்கனவே 'அல்டிமேட்டம்' கொடுத்திருந்தன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க விரும்பாத திமுக அரசு, இந்த முத்தரப்பு அமைச்சர்கள் குழுவை அமைத்துப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. "இன்றைய கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகள், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது" என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டால், அது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய புத்தாண்டுப் பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
in
தமிழகம்
