4 -1/4 ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம்; முதலமைச்சர் வருகையின் போது 200-க்கும் மேற்பட்டோர் கைது!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நெல்லைக்கு வருகை தந்துள்ள நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் தங்களுக்கு அரசு 'அல்வா' கொடுத்து ஏமாற்றி வருவதாகக் கூறி, கைகளில் அல்வா பாக்கெட்டுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (MUTA) அமைப்பின் சார்பில் நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இந்தப் பிரம்மாண்ட போராட்டம் அரங்கேறியது.
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குக் கடந்த 4 1/4 ஆண்டுகளாகப் பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகையை வழங்காமல் திமுக அரசு இழுத்தடித்து வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். "அரசாணை வெளியிடப்பட்டும் அதற்கான நிதியை ஒதுக்காமல், உயர்கல்வித்துறை அமைச்சரும் முதலமைச்சரும் எங்களுக்கு அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று முழக்கமிட்ட பேராசிரியர்கள், கைகளில் நிஜமான அல்வா பாக்கெட்டுகளை ஏந்தி நூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கல்விப் பணியில் நிலவும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பேராசிரியர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் நெல்லை மாநகர் பகுதிக்கு வரக்கூடிய அதே நேரத்தில் நடைபெற்ற இந்த மறியலால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேராசிரியைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். முதலமைச்சரின் வருகையை ஒட்டி நடைபெற்ற இந்த ‘அல்வா’ போராட்டத்தினால் நெல்லை சந்திப்புப் பகுதி சில மணிநேரம் போர்க்களம் போலக் காட்சியளித்தது.
