திருவள்ளூரில் பள்ளிச் சிறுவன் பலி; மேற்கு வங்க அமைச்சரைப் போல அன்பில் மகேஷ் ராஜினாமா செய்வாரா?
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 12 வயது சிறுவன் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இதற்குப் பொறுப்பேற்றுப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசின் மெத்தனப் போக்கினை விமர்சித்தார்.
"ஏஐ (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நவீன காலத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் தொடர் மெத்தனத்தால், ஒரு பள்ளிச் சுவர் விழுந்து சிறுவன் பலியாகி இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவன் படித்துப் பெரிய அதிகாரியாகிச் சேவை செய்வான் என்று கனவு கண்ட பெற்றோரின் தலையில் இடி விழுந்துவிட்டது. ஒரு பிஞ்சு உயிரின் பலி இந்த அரசிற்குச் சாபக்கேடாகும்" என்று ஆவேசமாகப் பேசினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஆர்.பி. உதயகுமார், "பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அமைச்சருக்கு எங்கே நேரம் இருக்கிறது? தனது ஆயுட்கால நண்பரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராகச் செயல்படுவதிலும், அவருக்குப் புகழ் பாடுவதிலுமே அமைச்சரின் நேரம் வீணாகி வருகிறது. துறையின் மீது கவனம் செலுத்த அவருக்கு மனமுமில்லை, நேரமுமில்லை. வெறும் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்துவிட்டு இதை அப்படியே கடந்து போய்விட முடியாது" என்றார்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அரூர் பிஸ்வாஸ் ராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், "அண்டை மாநிலத்தில் ஒரு அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்கிறார், ஆனால் இங்கே தனது நண்பரைக் காப்பாற்ற முதலமைச்சர் துடிக்கிறார். இனி இது போன்ற துயரங்கள் நடக்காமல் இருக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிரந்தரத் தீர்வு எடப்பாடியார் தான். 2026-ல் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரும்போதுதான் பள்ளிக் கல்வித் துறையின் உள்கட்டமைப்புகள் முழுமையாகச் சீரமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
.jpg)