கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் உறுதுணையாக இருந்த கணவருக்கும், மருத்துவர்களுக்கும் மணப்பெண் உருக்கம்!
கேரள மாநிலம், ஆலப்புழா அருகே திருமண நாளன்று விபத்தில் சிக்கி அவசர சிகிச்சை பிரிவில் (ICU) இருந்த மணப்பெண்ணுக்கு, மணமகன் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அபாய கட்டத்தைத் தாண்டி உடல்நலம் தேறி வரும் மணப்பெண், தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.
ஆலப்புழா, தும்போளி பகுதியைச் சேர்ந்த ஷாரோன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆவணி என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று ஆலப்புழாவில் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேக்கப் செய்வதற்காக ஆவணி தன்னுடைய தோழிகள் 3 பேருடன் காரில் கோட்டயத்திற்குச் சென்றுவிட்டு, மண்டபத்திற்குத் திரும்பி வரும் வழியில் கார் எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில் ஆவணிக்குக் கால் மற்றும் முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காகக் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து அறிந்த மணமகன் ஷாரோன், மிகுந்த வேதனையிலும் கூட, குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே ஆவணிக்குத் தாலி கட்ட விரும்பினார். மருத்துவர்கள் சம்மதம் அளித்ததை அடுத்து, மருத்துவமனையிலேயே, ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த ஆவணிக்குச் ஷாரோன் தாலி கட்டினார்.
அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆவணியின் உடல்நிலை தற்போது சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து, அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளார். இந்த நிலையில், அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் எனக்காகப் பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி. இந்த ஆபத்தான நிலையில் என்னுடன் உறுதுணையாக இருந்த எனது கணவர், மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் உருக்கத்துடன் கூறியுள்ளார். விரைவில் குணமடைவேன்: சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வரும் தான், இன்னும் மூன்று மாதத்தில் முழுமையாகக் குணமடைவேன் என்றும் அவர் கூறிய தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
