'பரணி தீபம்' அதிகாலையில் ஏற்றப்பட்டது: மழை காரணமாக மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மகா தீபம்!
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் வெகு சிறப்பாக ஏற்றப்பட்டது. ஒளி வடிவமான இறைவனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த நவம்பர் 24, 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் 3, 2025) அதிகாலை 4 மணி அளவில், அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
ஏகன் அனைகன், அனைகன் ஏகன் என்ற அத்வைத தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், முதலில் தீபங்கள் 1, 2, 3, 4, 5 என ஏற்றப்பட்டு, பின்னர் ஒரே தீபமாகப் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அம்மன் சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது.
அதிகாலையில் நடைபெற்ற பரணி தீபத் திருவிழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நடிகை ரோஜா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இவர்கள் 14 கிலோமீட்டர் நீளமான அண்ணாமலை மலையைக் கிரிவலம் செய்து, வழித்தடத்தில் உள்ள எட்டு லிங்கங்களையும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பக்தர்கள் மலை ஏற அனுமதி அளிக்கப்படவில்லை. இன்று ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரிய விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
