பெருந்துறை சாலையில் அடுத்தடுத்த அட்ராசிட்டி; வாகன ஓட்டிகள் அலறல் - வீடியோ ஆதாரத்துடன் வலைவீசும் காவல்துறை!
தமிழகத்தில் சமீபகாலமாக இருசக்கர வாகன விபத்துகள் ‘கிடுகிடு’ என அதிகரித்து வரும் வேளையில், ஈரோட்டில் சில இளைஞர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சாலையில் சாகசம் செய்த காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு என்ற பெயரில் ‘உருகி உருகி’ அறிவுரை வழங்கினாலும், அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இந்த இளைஞர்கள் தங்களது உயிரையும், மற்றவர்கள் உயிரையும் பணையம் வைத்து விளையாடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில், விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்று சேர்ந்த இளைஞர் கும்பல், அதிவேகமாகச் சென்று கொண்டே முன்பக்கச் சக்கரத்தைத் தூக்கி ‘வீலிங்’ (Wheeling) செய்து அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது இந்த ‘திறமையை’ உலகிற்குச் காட்ட வேண்டும் என்ற விபரீத ஆசையில், இதனை வீடியோவாகப் பதிவு செய்து தங்களது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து போகும் வகையில் மிக ஆபத்தான முறையில் இந்தச் சாகசம் அரங்கேறியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. "இவர்களின் ஒரு நொடி கவனக்குறைவு, சாலையில் செல்லும் அப்பாவி மக்களின் உயிரைப் பறித்துவிடும்" எனப் புலம்பும் வாகன ஓட்டிகள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ‘குண்டர் சட்டத்தின்’ கீழ் நடவடிக்கை எடுத்து பைக் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வீடியோ பதிவில் உள்ள வண்டிகளின் எண்களை வைத்து ஈரோடு மாவட்ட போலீசார் தற்போது அந்த ‘ரீல்ஸ்’ மன்னர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
