1.5 லட்சம் மின்னணு இயந்திரங்களில் 'பூஜ்யக் கணக்கு' உறுதி; 75 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அதிர்ச்சித் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஒருபுறம் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (டிசம்பர் 11) தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அலுவலர்கள் தொகுதிவாரியாகச் சரிபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டங்களில் சீல் வைக்கப்பட்டிருந்த அறைகளிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்தச் சரிபார்ப்பில், தற்போதைய இயந்திரங்களில் இருந்த வாக்காளர் விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒவ்வொரு பொத்தானும் சரியாகச் செயல்படுகிறதா என்று பரிசோதிக்கப்படும். இதில் பழுதான இயந்திரங்களைச் சம்பந்தப்பட்ட பெல் பொறியாளர்கள் சரி செய்கிறார்கள்; சரி செய்ய முடியாதவை உடனடியாக அகற்றப்படுகின்றன.
இந்தச் சோதனையின் போது, அனைத்துக் கணக்குகளும் பூஜ்யமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, சரியாகச் செயல்படும் இயந்திரங்களுக்கு 'ஓகே' என்று பதிவு செய்யப்படும். இருப்பினும், நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளுக்கான இயந்திரங்கள் மட்டும் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றில் இன்று முதல் முதல் நிலைச் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும் பட்சத்தில், தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் இருந்து கூடுதல் இவிஎம் இயந்திரங்களைப் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் இன்றுடன் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி நிறைவு பெறுகிறது. இதில், 75 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது; அதில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ள ஜனவரி மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டதன் மூலம், அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் ஆணையமே தங்களது பணியைத் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
