தேர்தல் வியூகம்: டெல்லி தலைமைக்கு அறிக்கை அளிக்க சென்னை வந்த நயினார் – அரசியல் பரபரப்பு.
சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியியுடன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நயினார் நாகேந்திரன் அவர்கள், பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவர் ஜெயப்பிரகாசுடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் உட்பொருள் குறித்துத் தகவல் அறிந்த வட்டாரங்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக – பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவலைப் பதிவு செய்துள்ளன. அ.தி.மு.க. தலைமையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி இயங்கும் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு கூட்டணியின் பலத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் அவர்கள் உடனடியாக டெல்லிக்குச் செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தையும் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்களிடம் அவர் தெளிவாகத் தெரிவிப்பார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு, இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் திட்டச் செயலாக்கத்தின் ஒரு முக்கிய அங்கம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
