குறைதீர்க்கும் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு; வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கக் கோரி வாலிபர் ஒருவர் அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி அதிகாரிகளின் மேஜையில் இருந்த ‘மைக்’கை சேதப்படுத்த முயன்றதால், அந்த நபர் அங்கிருந்து குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டார்.
ஈரோடு புதுமை காலனி பகுதியைச் சேர்ந்த அல்லா பக்ஸ் என்பவர், இன்று தனது தாயார் நூர்ஜகானுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மனு அளிக்க வரிசையில் நின்ற அவர், திடீரென அதிகாரிகளிடம் சென்று தனக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகவில்லை என்றும், உடனடியாகத் தனக்குத் திருமணம் செய்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மனுவை நீட்டியுள்ளார். இந்த வினோதமான கோரிக்கையைக் கண்டு அதிகாரிகள் மனுவைப் பெறத் தயங்கிய நிலையில், ஆத்திரமடைந்த அல்லா பக்ஸ் அதிகாரிகளுடன் ‘கறார்’ பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர், அங்கிருந்த மைக்கை பிடுங்கி எறிய முயன்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, தாய் மற்றும் மகன் இருவரையும் அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது அல்லா பக்ஸ் ஆவேசமாகச் சத்தமிட்டு ரகளையில் ஈடுபட்டதால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றித் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே பல அரசு அலுவலகங்களுக்குச் சென்று இதேபோலத் திருமணக் கோரிக்கை வைத்து ‘அட்ராசிட்டி’ செய்திருப்பதும் தெரியவந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த ‘திருமணப் போர்’ அங்கிருந்த பொதுமக்களிடையே சிரிப்பையும், அதேசமயம் சிறிது நேரப் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
