கோவையில் தி.மு.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம் அனுப்பி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
தி.மு.க கோவை வடக்கு மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி கழகத்திற்கு உட்பட்டது 9 வது வட்டக் கழகம் ஆகும். இதன் செயலாளராக மயில்சாமி இருந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க விற்கு பணியாற்றி வருபவர் மயில்சாமி. இந்நிலையில் மயில்சாமி தலைமையில் பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், பி.எல்.ஏ நிர்வாகிகள் உட்பட 75 க்கும் மேற்பட்டோர் வட்ட கழக செயலாளர் மயில்சாமியின் லெட்டர் பேடில் கையொப்பமிட்டு விளாங்குறிச்சி பகுதி கழகப் பொறுப்பாளர் விஜயகுமாருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் நாங்கள் தற்போது வகித்து வரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் கீழே குறிப்பிட்டு உள்ள பதவியில் இருந்து எங்களுடைய தனிப்பட்ட காரணங்களினால் விலக விரும்புகிறோம். எனவே எங்கள் அனைவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அமைப்பின் வளர்ச்சிக்காக இதுவரை உங்களுடனும் கழக தோழர்களுடனும் இணைத்து பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ராஜினாமா கடிதம் தி.மு.க வாட்ஸ் அப் குழுக்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இது கோவை தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ராஜினாமா கடிதம் கொடுத்த 9 வது வட்டக் கழக செயலாளர் மயில்சாமியிடம் கேட்டபோது
கடிதம் கொடுத்து இருப்பதாகவும், இன்னும் தலைமையில் இருந்து எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக பதில் வரவில்லை என்றும் கூறினார்.
ராஜினாமா குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறும் போது:
கடந்த சில மாதங்களாகவே கோவை வடக்கு மாவட்டம் உட்பட கோவையில் தி.மு.க நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுக் கட்சிகளில் இருந்து வரக் கூடிய நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களுக்கு பதவிகளை கொடுப்பதும் அவர்களுக்கு கீழ் பாரம்பரியமாக திமுகவில் பணி புரிபவர்கள் செயல் புரிய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுவதால் பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
கடந்த மாதத்தில் கூட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியிடம் தி.மு.க நிர்வாகி ஒருவர் செல்போனில் பேசும்போது
அ.தி.மு.க வில் இருந்து வந்தவர்களுக்கு கீழ் தன்னால் பணி புரிய முடியாது என்று பேசியதும் அதற்கு தொண்டாமுத்தூர் ரவி பதிலளித்து பேசிய ஆடியோ வைரலானது.
இந்நிலையில் கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 9 வது வட்டக் கழக செயலாளர் மயில்சாமி உட்பட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து இருப்பது கூட மாவட்ட நிர்வாகி ஒருவரின் செயலால் ஏற்பட்ட அதிருப்தி தான் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில் திமுக நிர்வாகிகள் ஒரு பகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
in
அரசியல்