ஜார்க்கண்ட் சிறுமியைத் தொடர்ந்து அசாம் சிறுவன் பலி: வால்பாறையில் அச்சத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில், மீண்டும் ஒருமுறை சிறுத்தை தாக்கிச் சிறுவன் பலியான சம்பவம், அங்குள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்புல் அலி மற்றும் ஷாஜிதா தம்பதியினரின் 4 வயது மகன். வால்பாறை அய்யர் பாடி ஜே.இ பங்களா குடியிருப்புப் பகுதியில் நேற்று (டிசம்பர் 5) இரவு ஏழு மணி அளவில், குடியிருப்பில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த சிறுவனைக் கவ்விக் கொண்டு தூக்கிச் சென்றது.
உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவனின் உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர், உடற்கூறு பரிசோதனைக்காகச் சிறுவனின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதே வால்பாறைப் பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியைச் சிறுத்தை கவ்விக் கொண்டு சென்று கொன்று தின்றது குறிப்பிடத்தக்கது. அந்தச் சிறுத்தை, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து சிறுவர்களைச் சிறுத்தை கவ்விக் கொண்டு சென்று தாக்கும் சம்பவங்களால், வால்பாறைப் பகுதியில் தங்கி, தேயிலைத் தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட மற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் மிகுந்த பீதியில் உறைந்துள்ளனர். சிறுவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் கண்ணீர் மல்கக் கதறிய காட்சிகள் காண்போரைக் கண்கலங்கச் செய்தது.
.jpg)