கனிம வள மாஃபியாக்களுக்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு; 2026-க்குள் டிஜிட்டல் கண்காணிப்புக்கு அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் இயற்கைச் செல்வங்களான மணல் மற்றும் கனிம வளங்கள் மாஃபியாக்களால் சூறையாடப்படுவதைக் கண்டு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தனது கடும் கோபத்தையும், கவலையையும் பதிவு செய்துள்ளது. நிலங்களை ஆக்கிரமித்துக் கனிம வளங்கள் திருடப்படுவதாக நடேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கனிம வளக் கொள்ளையைத் தடுப்பதில் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கை வாங்கித் தள்ளியது. "சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு, வெறும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது?" என்று நீதிபதிகள் எழுப்பிய சுளீர் கேள்வி, அதிகார வர்க்கத்தைச் சுருக்கெனத் தைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிப் பொறுப்பு என்று நீதிபதிகள் டிக்ளர் செய்தனர். அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்துடன் ஒரு 'மாஃபியா' போலச் செயல்படும் இந்த கும்பல்கள், அரசின் நிர்வாகத்தையே அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இந்தக் கொள்ளையை வேடிக்கை பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று சாடியது. மேலும், அதிகாரிகளின் தற்போதைய நடவடிக்கைகள் வெறும் கண் துடைப்பு நாடகமாகவே இருப்பதாகவும், சட்டவிரோதக் கொள்ளையைத் தடுக்க அனைத்துத் துறைகளும் ஒரு டீம் ஆக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கடுமையான ஆணை பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி பிடியை அடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் ஆஜரான கனிம வள ஆணையர், வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் கனிம வளத் திருட்டைத் தடுக்கப் புதிய மற்றும் முழுமையான டிஜிட்டல் நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி, கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ஜி.பி.எஸ் (GPS) மூலம் கண்காணிக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மணல் திருட்டு குறித்துத் துணிச்சலாகப் புகார் அளிக்கும் பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கனிம வள மாஃபியாக்களின் கொட்டத்தை அடக்க நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
