தரிசனம் முடிந்து திரும்பியபோது நேர்ந்த துயரம்! தஞ்சாவூர் ஓட்டுநரைப் பிடித்துப் போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் மூன்று பெண் பக்தர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூர் வந்துவிட்டுத் திரும்பிய கார், பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, டிசம்பர் 25: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இன்று அவர்கள் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலைப் பாலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பின்னால் வந்த கார் ஒன்று, பாதயாத்திரை சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள் (55) மற்றும் கரம்பவிளைப் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (55) ஆகிய மூன்று பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார் தஞ்சாவூரைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்தர்கள் மீது மோதியுள்ளது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட மணியாச்சி சரகக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள், விபத்தை ஏற்படுத்திய தஞ்சாவூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராம் பிரசாத் (32) என்பவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் பாதயாத்திரை சென்ற மற்ற பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
