திருப்புரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து, இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாததைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த மோதலில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றாதது குறித்து மனுதாரர் ராம ரவிக்குமார், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மாலை அவசரமாக முறையீடு செய்தார். நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என்று எச்சரித்த நிலையிலும் தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படவில்லை.
தீபம் ஏற்றாததைக் கண்டித்து, இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மலை மீதுள்ள தீபத் தூண் செல்ல பழனியாண்டவர் கோயில் வழியாக முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இதில், இரு போலீசார் காயமடைந்தனர்.
மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரசாந்த், பா.ஜ.க. மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உட்பட 15 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் 13 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
