நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்: "மறைமுக நோக்கத்துடன் தாக்கல்" என விமர்சனம்!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு டிசம்பர் 5, 2025 அன்று நிராகரித்தது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யவும், அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யவும் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையில் உள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையின்மேல் சென்று ஆய்வு செய்து, பழைய தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்குப் பிறகு, சட்ட ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி தீபத் தூணில் தீபம் ஏற்ற அறநிலையத்துறையும், காவல்துறையும் மறுப்பு தெரிவித்தன. மேலும், தீபத்தூணிற்கு அருகே 50 மீட்டர் தொலைவில் முஸ்லிம்கள் வழிபடும் சிக்கந்தர் தர்கா உள்ளதையும் காரணம் காட்டினர்.
இதனையடுத்து, நீதிபதி உத்தரவை அமல்படுத்தக் கோரி இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற முயன்றபோது, காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், "நீதிபதியின் உத்தரவு திருப்பரங்குன்றத்தில் சமூக ஒற்றுமையையும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும். இது தொடர்பாக எங்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பும் தரப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்டபின், உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு டிசம்பர் 4, 2025 அன்று மாலை தனது தீர்ப்பை வெளியிட்டது.
போலீசார் பாதுகாப்பு வழங்கத் தவறியதால் சிஐஎஸ்எஃப் (CISF) பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவிலும் எந்தவித மீறலும் இல்லை. அரசு தனது கடமையைச் செய்யவில்லை, மேலும் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தத் தவறியுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனு, தனிப்பட்ட நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது" என்று கடுமையாகக் குறிப்பிட்டு, அரசின் மனுவை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்தது.
