தமிழக-கேரள எல்லைச் சாவடியில் சட்டவிரோத வசூல் புகார்; சக்கரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப லஞ்ச விகிதம்!
தமிழக-கேரள எல்லையான கோவை பாலக்காட்டுச் சாலையில் அமைந்துள்ள கே.ஜி. சாவடி வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் (RTO Check Post) லாரி ஓட்டுநர் ஒருவரிடம் பகிரங்கமாக லஞ்சம் வசூலிக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஆதாரம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாகப் பரவி வருவதால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஊழல் விவகாரம் குறித்து காவல் துறையினர் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கே.ஜி. சாவடி சோதனைச் சாவடி மீது சரக்கு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிப்பதாக ஏற்கனவே புகார் மனுக்கள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி வந்த லாரி ஓட்டுநர் தினேஷிடம் லஞ்சம் வசூலிக்கப்பட்ட வீடியோவே இந்த சட்டவிரோத நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.வைரலான வீடியோவில் இடம்பெற்றிருந்த ஓட்டுநர் தினேஷ், இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசியபோது, "தான் ஓட்டி வந்த லாரியை மறித்து, சோதனைச் சாவடி ஊழியர்கள் லஞ்சம் கொடுக்குமாறு வற்புறுத்தினர். இதனால், நான் அங்கு சென்று ₹500 கொடுத்தேன். அவர்கள் அதில் ₹200 எடுத்துக்கொண்டு, மீதமுள்ள ₹300ஐத் திருப்பிக் கொடுத்தனர். அதன் பிறகுதான் பில்லில் முத்திரை குத்தி வழியனுப்பி வைத்தனர்," என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
மேலும், சரக்கு லாரிகளில் உள்ள சக்கரங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு லஞ்சப் பணம் முறைப்படி வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தான் ஓட்டி வந்தது 12 சக்கரங்கள் கொண்ட லாரி என்றும், 14 சக்கரங்கள் கொண்ட லாரிக்கு ₹300 லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார். இந்த அழுத்தமான ஆதாரம் அடங்கிய வீடியோ, கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேஷ், விசாரணையைத் தொடங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
