சிபிஐ புலனாய்வில் திடுக்கிடும் தகவல்: ₹250 கோடி மதிப்புள்ள நெய்யில் பாமாயில் கலப்படம்; சிக்கிய நிறுவன இயக்குநர்கள்!
உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) புனிதப் பிரசாதமான லட்டு தயாரிப்பிற்காக விநியோகிக்கப்பட்ட நெய்யில் நடந்த மாபெரும் மோசடி குறித்த திடுக்கிடும் தகவல்களை , மத்தியப் புலனாய்வுத் துறையின் (CBI) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), ஹைதராபாத் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனது ரிமாண்ட் அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஊழல் விவகாரம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் பகவான்பூரைச் சேர்ந்த போலே பாபா ஆர்கானிக் டேரி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள், கடந்த 2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் சுமார் 68 லட்சம் கிலோ அளவுக்கு கலப்பட நெய்யை தேவஸ்தானத்திற்கு விநியோகித்துள்ளனர். இந்த போலி நெய்யின் மொத்தச் சந்தை மதிப்பு சுமார் ₹250 கோடி இருக்கும் என SIT மதிப்பீடு செய்துள்ளது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள போலே பாபா நிறுவனத்தின் இயக்குநர்களான போமில் ஜெயின் மற்றும் விபின் ஜெயின் ஆகியோரிடம் SIT நடத்திய தீவிர விசாரணையில், அந்த நிறுவனம் தாங்கள் ஓர் துளி பால் அல்லது வெண்ணெய் கூட எந்தவொரு மூலத்திலிருந்தும் கொள்முதல் செய்யவில்லை என்ற அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளது.
ஒரு பால் பண்ணையின் பெயரில் இந்தக் கும்பல் முழுக்க முழுக்கப் போலியான நெய்யைத் தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது அதிரடித் தகவல் ஆகும். டெல்லியைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவரின் மூலம் மலேசியப் பாமாயில் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் பெயரில், பாமாயில் மற்றும் பாம் கர்னல் ஆயில் போன்றவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து உள்ளனர். இந்த எண்ணெய்கள் ஹர்ஷ் ஃப்ரெஷ் டேரி என்ற மற்றொரு ரகசிய அலகுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து போலே பாபா ஆலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், இந்த எண்ணெய்க் கலவைக்கு நெய்யின் மணம் ஊட்டவும், தேவஸ்தானத்தின் தரப் பரிசோதனை அதிகாரிகளை ஏமாற்றவும் மோனோடிகிளைசரைட்ஸ் அசிட்டிக் ஆசிட் எஸ்டர் போன்ற பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன என்றும் SIT தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றச் செயல் தொடர்பாக, மேலும் பல கண்காணிப்பு அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்புள்ளதாக நீதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
