கொலை, செயின் பறிப்புச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விடக் குறைவு; ஆவடியில் குட்கா பதுக்கல் அதிகம்: காவல்துறை அறிக்கை!
சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கலந்தாலோசனையில், நகரின் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் சாதனைப் பணிகள் குறித்துப் பல்வேறு தகவல்களைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சென்னையில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அதே சமயம் 4,979 சரித்திரப் பதிவேடுடைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மொத்தம் 4,979 ரவுடிகள் உள்ளனர் என்றும், இவர்களின் குற்றப் பின்னணியின் அடிப்படையில் 'ஏ' ப்ளஸ், ஏ, பி எனப் பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரவுடிகள் யாரேனும் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால், ஏற்கெனவே அவர்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சேர்த்தே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு சென்னையில் 102 கொலைகள் நடந்திருந்த நிலையில், இந்தாண்டு அது 82 ஆக (82) குறைந்துள்ளது. மேலும், செயின் பறிப்பு சம்பவங்கள் கடந்த ஆண்டு 35 ஆக இருந்தது இந்தாண்டு 21 ஆகக் (21) குறைந்துள்ளது. இந்தச் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொபைல் போன் பறிப்புச் சம்பவங்களும் கடந்தாண்டு 275 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 144 ஆகக் (144) குறைந்துள்ளது. மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வே டிஜிட்டல் கைதுகள் குறைவதற்குக் காரணம் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்துப் பேசிய காவல்துறை, டெல்லியில் கார் வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவத்தின் உடனடி விளைவாக , இங்கிருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காகச் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிங்க் நிற ரோந்து வாகனத் திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், சென்னையில் மட்டும் மொத்தம் 59 பிங்க் ரோந்து வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள கியூ.ஆர்.கோட் ஸ்டிக்கர் திட்டம்பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இது சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதிப்பதற்காகவே நிறையப் பயணிகள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்கா விவகாரம் குறித்து காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகப் பிரிவில் தான் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்படுவதாகவும், அதற்குக் காரணம் அங்குதான் குடோன்களில் பதுக்கி வைத்துள்ளனர் என்றும் விளக்கமளித்துள்ளது. சென்னையில் குட்காப் பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை என்றும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் அவற்றை விற்கவோ தயாரிக்கவோ தடையில்லை என்பதால், அங்கு சென்று யாரையும் கைது செய்ய முடியாது என்றும் காவல்துறை விதிமுறைகளை எடுத்துரைத்தது. இறுதியாக, தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கும் காவலர்களின் மேல் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கொள்கையின்படி, சமீபத்தில் விபத்தில் சிக்கிய பெண் காவலர் ஒருவரின் மேல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியது.
