342 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: சென்னை காவல்துறை தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்!
நூற்றுக்கணக்கான போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரை சென்னை நகர காவல்துறை கிட்டத்தட்ட அடையாளம் கண்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை நகரக் காவல் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல் மூலமான வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக, சென்னை காவல்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை சென்னை காவல் ஆணையரக எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் 342 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை அனுப்பிய மர்ம நபர்களை நெருங்கிவிட்டதாகவும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை முறைகள் மற்றும் வடிவங்களிலிருந்து, இந்த மிரட்டல் சம்பவமானது ஒரு சிறு குழுவினால் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மிரட்டலும் புரளி என் தெரிந்தாலும், அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு சோதனைகள் செய்துவருவதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு மிரட்டல் சம்பவமும் முறையாக ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, விசாரணைக்காக தீவிரவாத தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத தடுப்புப்பிரிவினர் இந்த வழக்குகளில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டார்க் நெட் மூலம் வருமானவர்கள் மிரட்டல் விடுத்து வருவதால் அவர்களின் ஐபி முகவரியை கண்டறிவது கடினமாக இருந்து வருவதாகவும், போலி அடையாளங்களுடன் உருவாக்கப்பட்ட அவுட்லுக் மற்றும் ஹாட்மெயில் கணக்குகளைப் பயன்படுத்தி பல அச்சுறுத்தல்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மின்னஞ்சல் சேவை வழங்குநர்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவதற்கு உதவிக்கோரி சென்னை காவல்துறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், அரசியல் தலைவர்களின் பெயர்கள் உட்பட சில முக்கிய வார்த்தைகளைக் குறிக்கும் கோரிக்கைகள் அமெரிக்காவில் நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகள் மற்றும் மூத்த பிரதிநிதிகள் ஆகியோருடன் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விவாதிக்க காவல் ஆணையர் அருண், "இவை புரளி அச்சுறுத்தல்கள் என்று உறுதியளித்துள்ளதாகவும்" சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை காவல்துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை ஆனால் முழு பாதுகாப்பு வழங்குவதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
