இயக்குநராக மீண்டும் முத்திரை பதித்த தனுஷ்; உணர்வூட்டும் நடிப்பு, நித்யா மேனனின் வெகுளித்தனம், ராஜ்கிரண் - சத்யராஜின் அனுபவ நடிப்பு எனப் படம் முழுக்க நிறைவு!
நடிப்பு மட்டுமின்றி, இயக்குவது மூலமாகவும் தான் ஒரு சிறந்த கலைஞன் என்று நிரூபித்து, நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. உணர்வுபூர்வமான கதைக் களத்தை சினிமா ஸ்டைலில் திரைசேர்க்கை செய்திருக்கும் தனுஷின் முயற்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கிராமத்தில் தனது தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் வசித்து வரும் தனுஷ், கிராமத்து வாழ்க்கையில் நாட்டமில்லாமல் வெளிநாட்டுக்குச் செல்கிறார். ஊரின் அடையாளமாகவே இருக்கும் ராஜ்கிரணின் 'சிவநேசன் இட்லி கடை'யைத் தனுஷ் நிராகரித்துச் செல்வதுதான் முதல் முரண். வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவுக்கும், தனுஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும் நிலையில், தந்தை ராஜ்கிரணும், தாய் கீதா கைலாசமும் காலமாகிறார்கள்.
கிராமத்துக்குத் திரும்பி வரும் தனுஷ், திடீரென வெளிநாட்டுக்குச் செல்ல மறுத்து, தந்தையின் இட்லி கடையை நடத்த அதிரடியாக முடிவு செய்கிறார். இந்த முடிவால், ஷாலினி பாண்டேவுடனான திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டையிட, இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி, தொழில் போட்டியால் தனுஷை எப்படியாவது ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் தனுஷ் இட்லி கடையைத் தொடர்ந்து நடத்தினாரா? அருண் விஜய் தனுஷை என்ன செய்தார்? சமுத்திரக்கனியின் திட்டம் என்ன ஆனது? என்பதே இந்தப் படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எப்போதும் போல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சிகளில் ரசிகர்களைக் கண்கலங்க வைத்து விடுகிறார். இட்லி கடையை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகி நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாகப் படம் முழுக்கப் பயணித்து வெகுளித்தனமான நடிப்பால் ஸ்கோர் செய்து, படத்திற்குப் பலம் சேர்த்து இருக்கிறார்.
அருண் விஜய் மிகவும் கோபக்காரனாகவும், ஈகோ உள்ளவராகவும் கம்பீரத்துடன் நடித்து இருக்கிறார். ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், இளவரசு ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பைக் கொடுத்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சர்ப்ரைஸ் ஆன நடிப்பை ம்வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.
இயக்குநர் தனுஷ், இந்தக் கிராமத்துக் கதையை உணர்வுபூர்வமான உண்மைச் சம்பவங்களைத் திரைசேர்க்கை செய்து, சினிமா ஸ்டைலில் கொண்டு சென்றுள்ளார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக, முதல் பாதியில் அம்மா, அப்பா பற்றிப் பேசும் உருக்கமான வசனங்கள் படத்துக்குப் பக்க பலமாக அமைந்து இருக்கிறது. படத்தில் வரும் கன்னுக்குட்டி காட்சிகள் சிறப்பு என்றால், ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.
பின்னணி இசையில் அவர் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். மொத்தத்தில், குடும்பப் பின்னணியுடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையைக் கொடுக்க இயக்குநர் தனுஷ் முயன்றிருக்கும் முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று அரசியல் களத்தினர் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் கருதுகின்றனர்.
