உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகள்; வழக்கு பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு!
புது தில்லி, அக்டோபர் 10: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் கரூர் மாவட்டத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த பேரழிவுச் சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று (அக். 10, 2025) உச்ச நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதத்தைக் கிளப்பியது. சம்பவத்தன்று விஜய் அங்கிருந்து தப்பி ஓடவில்லை என்றும், மாறாக காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் வெளியேறியதாகவும் த.வெ.க. தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வலுவான வாதத்தை முன்வைத்தது.
சட்டப் பின்னணிப்படி, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த த.வெ.க. கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகத் த.வெ.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தின் சட்ட நடைமுறைகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது எப்படி? கரூர் விவகாரம் மதுரை அமர்வுக்கு உட்பட்டது அல்லவா? ஒரே நாளில் இரு வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது என்ன நடைமுறை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் வாதிடுகையில், "உயர் நீதிமன்றம் எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே, கூட்ட நெறிமுறைகளை மீறியதாகப் பழி சுமத்தியது. த.வெ.க. தலைவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிப்போனதாக உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது தவறு. பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி காவல்துறையே அறிவுறுத்தியதால் விஜய் அங்கிருந்து சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவக்கூட எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது" என்று தீவிர வாதத்தை முன்வைத்தார். அவர் மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அரசியல் ரீதியாக மோசமானது என்றும், உச்ச நீதிமன்றமே சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஒரு நல்ல அதிகாரி. உயர் நீதிமன்றமே அவரைத் தேர்ந்தெடுத்தது. விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்குக் காரணம். உயிரிழந்தவர்களின் உறவினர்களை விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என எதிர்வாதம் செய்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.