கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Supreme Court Orders CBI Probe into Karur Stampede Case Where 41 Died

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 41 பேர் பலியான விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு! ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி மேற்பார்வையில் விசாரணை!

புது தில்லி, அக்டோபர் 13: கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக். 13) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த சிபிஐ விசாரணையானது ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சி, செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் மாவட்ட வாரியாகப் பரப்புரை மேற்கொண்டு வந்தது.  

செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு விஜய் வருகை தந்தார். மதியம் 12 மணிக்கு வரவிருந்த அவர், வழி நெடுகிலும் மக்கள் அளித்த வரவேற்பால் மாலை 7 மணிக்குத்தான் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.  கூட்டம் முடிந்து மக்கள் திரும்பிச் செல்லும்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்றத் தலையீடு:

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாஜக சார்பிலும் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, தமிழக அரசு தரப்பிலும், த.வெ.க. தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இன்றைய தீர்ப்பு:

இந்த நிலையில், இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, உண்மை வெளிவர உதவும் என்று கூறி த.வெ.க. தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk