ஐஸ்வர்யா ராஜேஷ், ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் துவக்கி வைத்த 'ஹெல்ப் ஆன் ஹங்கர் ஃபவுண்டேஷன்' திட்டம்!
சென்னை, அக்டோபர் 16: உலக உணவு தினத்தை முன்னிட்டு, 'ஹெல்ப் ஆன் ஹங்கர் ஃபவுண்டேஷன்' தொண்டு நிறுவனம் சார்பில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில், ஏழை எளியோருக்கான மாதாந்திர மளிகை பொருட்கள் வழங்கும் 'ஹோப்' (Hope) எனும் புதிய இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரியாணி விருந்துடன் களப்பணி:
கடந்த ஐந்து வருடங்களாகச் செயல்பட்டு வரும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ஃபவுண்டேஷன் நிறுவனம், உலக உணவு தினத்தன்று வருடந்தோறும் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்துகிறது.
இந்த வருட நிகழ்வில், சுமார் 5000 பேருக்குப் பிரியாணி உணவு சமைக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனச் செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்தனர். இந்நிகழ்வை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் ஆதி, சந்தோஷ் பிரதாப், மஹத், மைம் கோபி, கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
ஹோப் இணையதள அறிமுகம்:
நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஹெல்ப் ஆன் ஹங்கர் ஃபவுண்டேஷன்' சார்பில், ஏழை எளியோருக்கு மாதாமாதம் மளிகை சாமான்கள் வழங்கும் திட்டம் குறித்த ஹோப் எனும் புதிய இணையதளம் துவங்கப்பட்டது. இதில், மாதாமாதம் வெறும் ₹35-க்கு சந்தா (Subscription) செலுத்துவதன் மூலம் பலர் பசியாற உதவ முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு:
நிகழ்வில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபவுண்டேஷன் நிறுவனர் ஆலனைப் பாராட்டினார். ஆலன் இதை 6 வருடங்களாகச் செய்து வருகிறார். 5000 பேருக்குப் பிரியாணி போடுவது சாதாரண விஷயமல்ல. பெரிய ஆட்களிடம் உதவி கேட்டுப் போனபோது யாரும் உதவ முன்வரவில்லை. உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் ஃபவுண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எப்போதும் பெருமை. அதை நான் கர்வமாகச் சொல்லிக்கொள்வேன். புதிதாகத் துவங்கியுள்ள ஹோப் இணையதளம் மூலம், உங்கள் மொபைலில் மாதம் ₹35 சந்தா செலுத்தி, பலரின் பசிக்கு நீங்கள் உதவ முடியும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன்."
நடிகர் ஆதி, மஹத் கருத்துக்கள்:
நடிகர் ஆதி பேசும்போது, சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்னை அழைத்தார். அவர் தனக்காக ஒருபோதும் அழைக்க மாட்டார். 18 மில்லியன் மக்கள் இன்றும் பசியால் வாடுகிறார்கள் என்பது சோகம். எளியோருக்கு உணவளிக்கும் இவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.
நடிகர் மஹத் பேசும்போது, நண்பர் மூலம் ஆலன் பற்றித் தெரிந்து உதவி செய்தேன். நகரம் முழுக்க என்னை அழைத்துச் சென்று எவ்வளவு பேர் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்று காட்டியபோது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த ₹35, ஒருவருக்கு உணவளிக்கும். இந்த முயற்சிக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன்.
நிறுவனர் ஆலன் நன்றி:
நிறுவனர் ஆலன் பேசுகையில், இந்த முயற்சி தொடர்ந்து நடக்க எனது நண்பர்களான பிரபலங்கள் தான் காரணம். ஐஸ்வர்வர்யா ராஜேஷ் தான் 'ஏன் என் முகத்தை அம்பாஸிடராகப் போட்டு இன்னும் பெரிய அளவில் எடுத்துச் செல்லக்கூடாது?' என்று கேட்டு, இந்த முயற்சியைப் பெரிதாக்க உதவினார். புதிதாகத் தொடங்கியுள்ள ஹோப் இணையதளத்தில் அனைவரும் சந்தா செலுத்தி ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.