ராமதாஸ் விரும்பினால் மட்டுமே கூட்டணி: அன்புமணி கோபத்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறாததுதான் காரணம் - பாமக எம்.எல்.ஏ. அருள் அதிரடிப் பேச்சு!
சென்னை, அக்டோபர் 12: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, தலைவர் ராமதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அறிவித்த நிலையில், அன்புமணி ஆவேசமாகப் பேசுவதற்குக் காரணம், ராமதாஸ் அவரைச் சந்திக்க மறுத்ததுதான் என்று பாமக இணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அருள் தெரிவித்துள்ளார்.
மருத்துவராகவும், வன்னியர் சங்க நிறுவனராகவும் இருந்த ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இரு அணிகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். வன்னியர் சங்கத்தில் இருந்து கட்சியாக உருவெடுக்கும்போது பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டோம் என பொதுக்கூட்டத்தில் சத்தியம் செய்து கட்சியை தொடங்கியவர் ராமதாஸ். அதன்பின்னர் தனது மகன் அன்புமணியை கட்சியில் சேர்த்தது, தலைவர் பதவி வழங்கியது, MPயாக்கியது அனைத்தும் பேசு பொருள் ஆனது. இந்நிலையில், மற்றொரு உறவினரான முகுந்தனுக்கும், ராமதாஸ் பதவி வழங்க முற்பட்டபோது அன்புமணிக்கும் அவருக்கும், இடையே மேடையிலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பல சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ராமதாஸ் நியமித்தவர்களை அன்புமணி நீக்குவதும், அன்புமணி நியமித்தவர்களை ராமதாஸ் நீக்குவதுமாக மாறி மாறி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் குழப்ப நிலையிலே இருவரும் வைத்திருந்தனர்.
இந்த சூழலில் ராமதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அதன்பின் அவரை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிற கட்சியினர் நேரில் சென்றும், கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் செல்போன் மூலமும் நலம் விசாரித்தனர். இருதினங்களுக்கு முன்பு, பனையூரில் பேசிய அன்புமணி, ராமதாஸ் உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகமாடுவதாவும், அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அனைவரையும் தொலைத்து விடுவேன் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளரும், MLAவும் ஆன அருள் பேசுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்னதாக ராமதாஸுக்கு இதய அறுவ சிகிச்சை செய்யப்பட்டது, அதன் காரணமாக, அவர் தன்னிச்சையாகவே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக்கொண்டதாகவும், அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ராமதாஸ், அன்புமணியை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் அதனால் அவர் அதிருப்தியில் பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிறக்கட்சி தலைவர்கள் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த நிலையில் தனக்கு எவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்ற ஆற்றாமையில் ராமதாஸை நாங்கள் காட்சிப் பொருள்போல் ஆக்கிவிட்டதாக அன்புமணி குற்றம் சாட்டுவதாக, MLA அருள் கூறியுள்ளார். அத்தோடு, கூட்டணி குறித்து பேச விரும்பும் கட்சிகள் ராமதாஸை மட்டுமே அணுக வேண்டும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நான், ராமதாஸின் தளபதியாக இருப்பதால், அன்புமணிக்கு என் மீது கோபம் இருக்கலாம், எனினும், இருவரும் முன்புபோல் இணைந்து செயல்பட வேண்டுமென்றே நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் அன்புமணி அதற்கு ஒப்புக்கொள்ளாததாலே, அவரை புதியக்கட்சி தொடங்கிக்கொள்ள சொல்லி, ராமதாஸ் கூறினார், மேலும் நான் பெற்ற மகனே, இப்படி அசிங்கப்படுத்துகிறாரே என ராமதாஸ் மனம் வருந்தியதாவும் MLA அருள் தெரிவித்துள்ளார்.