இரவு நேரப் பயணத் தடை நீக்கப்பட்ட சில நாட்களிலேயே விபத்து; பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை!
கோவை, அக்டோபர் 13: கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தில் இன்று (அக். 13) அதிகாலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்துக்குப் புதிதாக அமைக்கப்பட்டு, சமீபத்தில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம் இது. இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், அதிவேகமாக வந்த ஒரு கார், கோல்டுவின்ஸ் அருகே சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியது. இந்த மோதலில், காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்பட இரண்டு ஆண்கள் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தின் கோரத்தால் கார் முற்றிலுமாக நொறுங்கிப் போனது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்புத் துறை அதிகாரிகள், நொறுங்கிய காரை மீட்டு, உள்ளே சிக்கியிருந்த மூன்று பேரின் உடல்களை மீட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பாலம் திறக்கப்பட்டபோது, இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 7 மணி வரை பாலத்தில் செல்லக் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், காவல்துறை இந்தத் தடை ஏதுமில்லை எனக் கூறி, இரவிலும் பயணிக்கலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு நாட்களே ஆன நிலையில், இன்று அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து, மேம்பாலத்தில் அதிவேகமாகச் செல்வதன் ஆபத்தை உணர்த்தியுள்ளது.