வழி தவறி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீடியோ கால் மூலம் மகனிடம் ஒப்படைத்த மகளிர் போலீசார்!
வேலூர், அக்டோபர் 11: ஆந்திர மாநிலத்தில் இருந்து வழி தவறி வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு வந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மீட்டு, அவரது மகனிடம் பத்திரமாக ஒப்படைத்த காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தங்கள் காக்கிச்சட்டைக்குள் இருக்கும் மனிதநேயத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். அவர்களின் இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சம்பவ விவரப்படி, ஆந்திர மாநிலம் விஜயவாடா, சிட்டி நகரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. தேசிய மாணவர் படையில் சீனியர் அசிஸ்டெண்டாகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த ஜூலை மாதம் முதல் சிறிது மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் கடந்த அக். 7-ஆம் தேதி விஜயவாடாவிலிருந்து ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்துள்ளார். நேற்று (அக். 10) அவர் ரயில் நிலையம் அருகே உள்ள தாராபடவேடு பகுதியில் திக்குத் திசை தெரியாமல் திரிந்ததைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த வித்யா (41), அவரை முதலில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை:
ரயில்வே பாதுகாப்புப் படையின் அறிவுறுத்தலின் பேரில், வேளாங்கண்ணி காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு சுமார் ஆறு மணி நேரமாக, உதவி ஆய்வாளர்கள் சுமதி, சுஜாதா மற்றும் காவலர்கள் நதியா, சக்தி பிரியா ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் போராடி அவரது மகன் ஜுனத்தின் தொலைபேசி எண்ணைப் பெற்றுள்ளனர்.
உடனடியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜுனத்துடன் பேசிய போலீசார், காணாமல்போன அவரது தாயை அவரிடம் காண்பித்தனர். தனது தாயைக் கண்ட ஜுனத் ஆனந்தக் கண்ணீர் விட்டு, காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், 'தாய் வேளாங்கண்ணியை அங்கேயே வைத்திருங்கள், உடனடியாகப் புறப்பட்டு காட்பாடி வருகிறேன்' என்றும் ஜுனத் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மாலை 6 மணிக்கு மேல் ஒரு பெண்ணைக் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்பதால், காட்பாடி மகளிர் காவல் நிலைய போலீசார், அந்தப் பெண்ணை முறுக்கேறி பகுதியில் உள்ள சுவேதார் இல்லத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணைப் பாதுகாப்பாகக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்த வித்யா என்ற பெண்மணியை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெகுவாகப் பாராட்டினர். கடமைக்கு அப்பாற்பட்ட இவர்களின் இந்த மனிதநேயமிக்கச் செயல் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.