கிடா விருந்தில் கத்தியால் குத்தி கொலை: பாஜக கணபதி பகுதி துணைத் தலைவர் குட்டி என்ற கந்தசாமிக்கு கோவை நீதிமன்றம் தீர்ப்பு
கோவை, அக்டோபர் 15: கோவை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பாக கிடா விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை வழக்கில், அப்போதைய பா.ஜ.க. கணபதி பகுதி துணைத் தலைவர் குட்டி என்ற கந்தசாமி என்பவருக்குக் கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று (அக். 15) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சம்பவம் 30.09.2018 அன்று இரவு கோவை, பேரூர் உட்கோட்டம், ஆலாந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணபதிக்காரர் தோட்டம், ஏழு வாய்க்கால், கோட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற 'கிடா விருந்து' நிகழ்ச்சியில் நடந்தது. அப்போது, விநாயகர் சதுர்த்தி நன்கொடை தொகை வசூல் குறித்து ஏற்பட்ட தகராறில், நாகராஜ் (வயது 21) என்பவரை, அப்போதைய பா.ஜ.க. கணபதி பகுதி துணைத் தலைவராக இருந்த கந்தசாமி (வயது 29/2018) என்பவர் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தத் தாக்குதலில் கடுமையாகக் காயமடைந்த நாகராஜ், சிகிச்சை பலனின்றி 01.10.2018 அன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 166/2018, பின்னர் கொலை வழக்காக (பிரிவுகள் 294(b), 302 IPC) மாற்றப்பட்டது. குட்டி என்ற கந்தசாமி 03.10.2018 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
ஆலாந்துறை காவல் நிலையம் பதிவு செய்த இந்த வழக்கு (S.C.No.96/2019) கோயம்புத்தூர் 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இன்று (அக். 15), நீதிபதி சிவக்குமார் அவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, குட்டி @ கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பால் கோவை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.