போஸ்ட்மார்ட்டம் குறித்த உச்ச நீதிமன்றக் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கவில்லை; ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் முதல்வர் ஏமாற்றப்படுகிறார் - அண்ணாமலை சாடல்!
சென்னை, அக்டோபர் 15: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முரண்பட்ட தகவல்களை அளிப்பதாகவும், முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் மாநிலத் தலைவருமான அண்ணாமலை இன்று (அக். 15) செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார்.
கரூர் விவகாரம் குறித்த குற்றச்சாட்டுகள்:
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில், இந்த விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையின் மீது தவறு இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் அவர்கள் 500 பேர் பாதுகாப்பில் இருந்ததாகவும், சம்பவ இடத்தில் 350 பேர் இருந்ததாகவும், மீதம் 150 பேர் வேறு இடங்களில் இருந்ததாகவும் முதலில் தெரிவித்தார்.
தற்போது, சிபிஐ-க்கு மாற்றிய பிறகு, காவல்துறை அறிக்கையில் சம்பவ இடத்தில் 350 பேர் மட்டுமே பாதுகாப்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் எண்ணிக்கையை முன்னுக்குப் பின் முரணாக மாற்றி சொல்கின்றனர். முதல்வர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை விடுத்து, சிபிஐ-க்கு முழு ஒத்துழைப்பு நல்கி உண்மையை கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரேதப் பரிசோதனை சர்ச்சை:
பிரேதப் பரிசோதனை செய்ய இரண்டு மேஜைகள் தான் இருந்தது என்றும், அதனால் உடற்கூராய்வு செய்ததாகச் சொன்ன நேரமும் ஒத்துப் போகவில்லை என்றும் உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பி உள்ளது.
முதல்வர், துணை முதல்வர் வந்துவிட்டு துபாய் செல்ல வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர் என்றும், இதையெல்லாம் சிபிஐ கையில் எடுத்து விசாரிப்பார்கள் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். மேலும், எதையோ செய்யப் போய் இவர்கள் மாட்டிக் கொண்டார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை கூடாது என வாதாடி உள்ளனர்.
அரசியல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள்:
வி.சி.க.வினரின் உருட்டல் மிரட்டலுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்றும், விசிக விவகாரத்தில் முதல்வர் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?" என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இந்தி எதிர்ப்பு மசோதா தாக்கல் செய்வதாகக் கூறி பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. கரூர் விவகாரத்தை மடைமாற்றம் செய்ய இந்த விவகாரத்தை இவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
ஃபாக்ஸ்கான் மற்றும் முதலீடு சர்ச்சை:
ஏமாற்றுதல்: ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் புதிய முதலீடு செய்யவில்லை என்று கூறியதைச் சுட்டிக்காட்டி, முதல்வருக்கு ஆங்கிலம் தெரியாது; பாக்ஸ்கான் நிறுவனத்தாருக்குத் தமிழ் தெரியாது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் உண்மையை பேசிய பிறகு அவர்களுக்குப் பிரச்சனை. டி.ஆர்.பி. ராஜா முதல்வரை ஏமாற்றுகிறார் என்று அண்ணாமலை விமர்சித்தார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூகுள் நிறுவனத்தை 15 பில்லியன் டாலர் முதலீட்டில் கொண்டு வந்துவிட்டார். இவர்களே திராவிட மாடல் எனச் சத்தம் போட்டு மாட்டிக் கொண்டார்கள்," என்று கூறி திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.