வருங்காலத்தில் ராக்கெட் எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்பாடு; ஏவுகணை தயாரிப்பை அப்துல் கலாம் தவிர்த்தார்: இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் தகவல்!
ஏஐ தொழில்நுட்பம் மனித மூளையை மிஞ்சினாலும், அது மனிதக் கட்டுப்பாட்டிற்குள் வரும்: மாணவர் தின நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு!
ஆவடி, அக்டோபர் 15: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று (அக். 15) உலகம் முழுவதும் மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன், ராக்கெட் எரிபொருள், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் அப்துல் கலாம் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
வேல்டெக் பல்கலைக்கழகத்துடன் விருட்ஷா அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மரங்களை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன், திரைப்படப் பாடகர் சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். மேலும், 4000 மாணவர்கள் ஒன்றிணைந்து அப்துல் கலாமின் முக வடிவில் நின்று சாதனை படைத்தனர்.
விஞ்ஞானி இளங்கோவனின் பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
தற்போதுள்ள ஏஐ (AI) தொழில்நுட்பம் மனித மூளையைக் கடந்து சென்று கொண்டிருந்தாலும், வரும் காலங்களில் அது மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் வரும். தற்போது லிக்விட் எரிபொருளைப் (Liquid Fuel) பயன்படுத்தி ராக்கெட்டுகள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், வருங்காலங்களில் இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, ஹைட்ரஜனை எரிப்பொருளாகப் பயன்படுத்தி ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் சூழல் ஏற்படும்.
அப்துல் கலாமின் பார்வை (ஏவுகணைகள் குறித்து):
நாடு கடந்து தாக்கும் ஏவுகணைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு வந்தாலும், எவ்வளவு செலவு செய்து ஏவுகணைகளைத் தயார் செய்தாலும், அது மனித உயிரை அழிப்பதற்குப் பயன்படுகிறது. ஏவுகணைகள் மனித உயிரை அழிக்கும் என்பதால், அப்துல் கலாம் ஏவுகணைகள் ஆராய்ச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கூடப் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
அவர் ஏவுகணைகள் தயாரிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். பாதுகாப்புக்கு பயன்படுத்தினாலும், முடிவில் மக்களை அழிக்கும் செயலில் ஏவுகணைகள் உள்ளன என்றும் இளங்கோவன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்காலங்களில் மனிதன் இயற்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.