தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் எடை குறைந்தது ஏன்? - 1999-ல் கவசம் செய்த மயிலாப்பூர் நகைக்கடையில் விசாரணை!
சென்னை, அக்டோபர் 15: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் உள்ள துவாரபாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களைச் சீரமைக்கச் சென்னைக்குக் கொண்டு வந்தபோது, அதில் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக்குழு தற்போது சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவத்தின் பின்னணி:
சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே உள்ள 12 துவாரபாலகர் சாமி சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொலிவு இழந்ததால், அவற்றைப் புதுப்பிக்கத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, இந்தக் கவசங்கள் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஒப்படைக்கப்பட்டபோது அந்தக் கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது.
பணிகள் முடிந்து சபரிமலைக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டபோது, கவசத்தின் எடை குறைவாக இருந்தது. இதுதொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாகத் தங்கத் தகடுகளைப் புதுப்பிக்க இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் புகார் அளித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இந்தக் கவசங்களின் மூலம் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாகப் புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குப்பதிவும் விசாரணையும்:
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் சிறப்புக் குழுவை நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இடைத்தரகர் உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரியச் செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு விசாரணைக்குழு தற்போது சென்னைக்கு வந்து, மயிலாப்பூரில் உள்ள JNR நகை கடையில் விசாரணை நடத்தி வருகிறது. சபரிமலை கோயிலில் உபயோகித்து வரும் இந்தக் கவசத்திற்கான தங்கத் தகடு 1999-ஆம் ஆண்டு இந்த JNR நகைக்கடையில் தான் செய்து கொடுக்கப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.