பாலியல் வழக்கு விவகாரத்தில் இரு தரப்பும் அனைத்துப் புகார்களையும் திரும்பப் பெற உத்தரவு; வழக்கில் உள்ள தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடவும் தடை!
சென்னை, செப்டம்பர் 25: நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மன்னிப்பு என்பது சரியான தோரணையில் இல்லையென நீதிபதிகள் காட்டமாகக் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றியதாக, சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதைக் குறுக்கிட்டுப் பேசிய நீதிபதிகள், சீமான் தாக்கல் செய்த மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை நாங்கள் பரிசீலனை செய்தோம். அதில் எங்களுக்குத் திருப்தியில்லை. அந்த மன்னிப்பு என்பது சரியான தோரணையா? அதை நாங்கள் கண்டிப்பாக ஏற்க முடியாது என்று காட்டமாகத் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அனைத்துப் புகார்களையும் திரும்பப் பெற வேண்டும்.
குறிப்பாக, சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரும் தாக்கல் செய்யும் புதிய பிரமாணப் பத்திரத்தில், அனைத்துப் புகார்களும் திரும்பப் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதேசமயம், வழக்கின் விவரங்கள் குறித்து இருதரப்பும் ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியோ அல்லது வீடியோவோ வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.