வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்; அரசு அலுவலர்களுக்குப் பணி பாதுகாப்புச் சட்டம் கோரி கண்டன முழக்கம்!
ராணிப்பேட்டை, செப்டம்பர் 25: ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், நில அளவை அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
"உங்களுடன் ஸ்டாலின் முகாம்" திட்டத்தை புறக்கணித்து மாலை 3 மணி முதல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். "அரசு அலுவலர்களுக்குப் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்", "கருணை அடிப்படையில் பணி நியமனத்தை 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்" உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.