காவல் நிலையத்தில் கொடுத்த புகாரால் உருவான திருட்டுக் காதல்; பரிகாரம் செய்வதாகக் கூறி நடந்த படுகொலை முயற்சி: தருமபுரியில் பரபரப்பு!
தருமபுரியில் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த பெண்ணை காதலித்து, பின்னர் அவரைப் பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில், தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி மேட்டில் உள்ள பெருமாள் கோயில் அருகே ஒரு கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் கூக்குரல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக வந்த மூன்று ஜோதிடர்கள், உயிர்ப் போராட்டத்தில் இருந்த அந்தப் பெண்ணை கயிறு கட்டி மீட்டனர். கிணற்றில் இருந்து வெளியே வந்த அந்தப் பெண்ணோ, ராஜாராம்... உன்னை சும்மா விடமாட்டேன். என்னையே கொல்லப் பார்க்கிறாயா? என்று ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்தப் பெண் கொடுத்த தகவலின் பேரில் நடத்திய துரித விசாரணையில் ஒரு காவல் அதிகாரியின் திருட்டுக் காதல் கதை அம்பலமானது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண், தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த கோமதி என்பதும், அவர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளிக்கச் சென்றபோது தனிப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராம் என்பவருடன் காதல் ஏற்பட்டதும் தெரியவந்தது. நாளடைவில், ராஜாராம் தனது குடும்பத்தினருக்குத் தெரிந்ததால், கோமதியைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், இருவருக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தி விடுவதாகக் கோமதி மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், ராஜாராம், நம் காதல் நிலைக்க, பரிகாரம் செய்ய வேண்டும்” எனக் கூறி கோமதியை பெருமாள் கோயில் மேட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கிணற்றில் தண்ணீர் எடுத்து வரும்படி கூறிய ராஜாராம், கோமதி தண்ணீர் எடுக்கும்போது அவரைப் பிடித்துக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கோமதி போலீசாரிடம் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாகக் கிணற்றில் இருந்த ஒரு பாறையைப் பிடித்துக்கொண்டு அவர் உயிர்தப்பியுள்ளார். கோமதி அளித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார், தனிப்பிரிவு எஸ்.ஐ. ராஜாராமை கைது செய்தனர். இதையடுத்து, அவரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.