தனிப்பட்ட பகையால் அதிகாரியைச் சிக்க வைத்தாரா? - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை, நீதிபதிகள் பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில், நீதிபதி செம்மலுக்கும், அவரது பாதுகாவலர் லோகேஸ்வரனுக்கும் இடையே தனிப்பட்ட பிரச்னை இருந்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோகேஸ்வரனின் மாமனார் சிவக்குமார் என்பவர் மீதான வழக்கில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறித்தான், நீதிபதி செம்மல் அவரை கைது செய்ய உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.
நீதிபதி உள்நோக்கத்துடன் உத்தரவிட்டதாகக் காவல்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே டி.எஸ்.பி.யைச் சிறையில் அடைக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், தற்போதைய உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நீதிபதி செம்மல் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.