இடியும் மின்னலும் இன்றி பெய்த பலத்த மழையால் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்ப்பு; விவசாய நிலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓட்டம்!
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த ஒரு மணி நேர கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை பலத்த மழையாகப் பொழிந்தது.
ஓமலூர் பேரூராட்சி, காமலாபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியும் மின்னலும் இல்லாமல் பெய்த இந்த அமைதியான மழை, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது நிலவும் குளிர்ச்சியான சூழல் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. மேலும், கனமழையின் காரணமாகச் சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் விவசாயப் பணிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.